

வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்காயம் ஒன்றியத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் பதிவான வாக்குபெட்டிகள், ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜி, தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் அங்கு வந்தார்.
அப்போது, திமுகவினர் வாக்கு பெட்டிகளை மாற்றிவிட்டதாக கூறி அதிமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 2 பேர், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த 3 காவலர்கள் என மொத்தம் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திமுகவினர் அத்துமீறி வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்ததை கண்டித்தும், ஆலங்காயம் ஒன்றியத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும், திமுக எம்எல்ஏ தேவராஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்டச்செயலாளர் தேவேந்திரன் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் ஆலங் காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரி யிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனுவை வழங்கினர். ஆனால், அதை பிடிஓ வாங்க மறுத்ததால், நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பொறுப்பு அலுவலர் சுரேஷை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.