சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடியில் - 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு முழுக் கூலி வழங்கிடக் கோரி ஆர்ப்பாட்டம் :

சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடியில் -  100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு  முழுக் கூலி வழங்கிடக் கோரி ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு முழுக்கூலியை வழங்க வலியுறுத்தி சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது, கூலி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என தொழிலாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

சத்தியமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.கே.முருகன், சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.சி.நடராஜ், எம்.சுரேந்தர், கடம்பூர் கே.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:

திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், அவினாசி, காரமடை போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் வழங்கப்படும் கூலியின் அளவைவிட, குறைந்த அளவான கூலியே சத்தி, தாளவாடி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியங்களில் வழங்கப்படுகிறது. அரசு, நடப்பு நிதியாண்டிற்கு நிர்ணயித்துள்ள ரூ .273 கூலியை முழுமையாக வழங்க வேண்டும்.

பல இடங்களில் எஸ்சி/எஸ்டி பிரிவினர் மட்டும் இதுவரையிலும் கூலி பெறாமலும், இதர பிரிவினர் கூலி பெற்றும் உள்ளனர். கூலி வழங்கும் முறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றத்தால், கிராமத் தொழிலாளர்களிடையே சமூக ரீதியான பிளவை உருவாக்கவும், கூலி வழங்கும் முறையில் தேவையற்ற தாமதத்தை உருவாக்கவும் செய்யும். எனவே, தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை, உரிய நேரத்தில் வழங்க வேண்டும், என்றனர்.

பட விளக்கம்

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு முழுக்கூலியை, தாமதமின்றி வழங்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in