

கிருஷ்ணகிரியில் பெய்த தொடர் மழையால், மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சூழ்ந்து குளம் போல நீர் தேங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே கிருஷ்ணகிரி வட்ட மின்பகிர்மான மேற்பார்வை அலுவலகம் உள்ளது. அலுவலக வளாகத்தில் நகர், மற்றும் புறநகர், ஊரக மற்றும் தொழிற்பேட்டைக்கான உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளன.
இந்த அலுவலகங்கள் முன்பு கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழைநீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல தேங்கி நிற்கிறது.
குறிப்பாக புதிய இணைப்பு பெறுபவர்கள், மின் குறைகள், பெயர் மாற்றம் உட்பட அனைத்தும் இந்த அலுவலகங்களில் மட்டும்தான் செய்ய முடியும். ஆனால் இங்கு வரும் மக்களுக்கு செல்வதற்கு கூட பாதை இல்லாமல் சேறும் சகதியுமாக உள்ளது.
தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றியும் நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.