

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 24 உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் காலியாகஉள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. சேலம் மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் பதவி உட்பட 24 பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் 1,22,857 பேர் வாக்களிக்க உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 195 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இங்கு 29 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு உட்பட 73 வகையான பொருட்கள் நேற்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 785 பேர் ஈடுபடவுள்ளனர்.
சேலம் மாநகர பகுதியில் மாநக காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா தலைமையில் 361 போலீஸாரும, மாவட்ட பகுதியில் எஸ்பி அபிநவ் தலைமையில் 650 போலீஸார் என ஆயிரம் போலீஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.