கோவை, திருப்பூர் மாவட்டங்களில் - 7 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் : மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நேற்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நேற்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 7 அரசு மருத்துவமனைகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.

‘பிஎம் கேர்ஸ்’ நிதியின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்ட பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நேற்று திறந்துவைக்கப்பட்டன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த நிலையம், மருத்துவமனையின் மகப்பேறு அறுவைசிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோவை அரசு மருத்துவ மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மருத்துவமனையின் டீன் நிர்மலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி கொள்கலனை ஆட்சியர் சு.வினீத் பார்வையிட்டார்.

இந்த இயந்திரம், ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. “இதன் மூலம் 200 நோயாளிகளுக்கு மேல் ஒரே நேரத்தில் ஆக்சிஜன் கொடுக்க முடியும். கரோனா நோயாளிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுகிறவர்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி டீன் முருகேசன், கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அலுவலர் பாரதி, உதவி மருத்துவ அலுவலர்கள் வினோத், செந்தில்குமார், மயக்கவியல்துறை தலைவர் பூங்குழலி, மயக்கவியல் மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, உடுமலை அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி கொள்கலன் திறக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in