முதுமலையில் சுற்றித்திரியும் ‘டி.23’ புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை : தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் உறுதி

முதுமலையில் சுற்றித்திரியும் ‘டி.23’ புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை :  தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் உறுதி
Updated on
1 min read

சிங்காரா வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 பரண்களில் 4கால்நடை மருத்துவர்கள் இருந்தபடி ‘டி.23’ புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி (டி.23) தஞ்சமடைந்துள்ளது. அதை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். வனத்துறையினரின் உத்திகள் குறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதன்மை உயிரின வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறியதாவது:

கூடலூர் தேவன் எஸ்டேட், மேபீல்டு, சிங்காரா பகுதியில் 4 நபர்களையும், 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற ‘டி.23’ புலியைப் பிடிக்கும் பணி தொடர்ந்து 12-வது நாளாக நடைபெற்று வருகிறது. ‘டி.23’ புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்கள், புலியின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வயது முதிர்வு காரணமாக வேட்டையாடும் திறனை இழந்ததால், மனிதர்கள் மற்றும் கால்நடைகளை இப்புலி தாக்கி வருகிறது. புது உத்திகளைக் கையாண்டு ‘டி.23’ புலி பிடிக்கப்படும். வேட்டை தடுப்பு காவலர்களான பழங்குடியினரின் ஆலோசனையின்படி புலியைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிங்காரா வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 பரண்களில் 4 கால்நடை மருத்துவர்கள் இருந்தபடி ‘டி.23’ புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘டி.23’ புலி பிடிபட்டவுடன் கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் மனித - வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில், மக்களை அச்சுறுத்தி இடையூறு செய்யும் வனவிலங்குகளைக் கண்டறிந்து ரேடியோ காலரிங் மூலமும், வன ஊழியர்களைக் கொண்டும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in