வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க நாமக்கல் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு :

வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க நாமக்கல் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு :
Updated on
1 min read

நாமக்கல்: வளையப்பட்டி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் முன்னேற்றக் கழக தலைவர் செல்ல. ராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் நாமக்கல் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனு விவரம்:

மோகனூர் தாலுகா வாளையப்படியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மோகனூர் ஒன்றியம், எருமப்பட்டி ஒன்றியம், திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் ஒன்றியம், நாமக்கல் ஒன்றியம் ஆகிய அனைத்துப் பகுதிகளின் மையப்பகுதியாக வளையப்பட்டி அமைந்துள்ளது.

இப்பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காய்கறிகள், சின்ன வெங்காயம், கீரை வகைகள், பூக்கள் ஆகியவற்றை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை நாமக்கல், கரூர், சேலம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே, வளையப்பட்டி ஊராட்சியில் போதுமான இடவசதி உள்ளதால் அப்பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், பயனுள்ளதாக அமையும். மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்க வழிவகை ஏற்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in