

செங்கல்பட்டு மாவட்டத்தின் 4 ஒன்றியங்களில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு 2 மணி நேரம் தாமதமானது.
திருப்போரூர் ஒன்றியம் கோவளம் ஊராட்சியின் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள 8-வது வார்டில் கிராம மக்களும், 9-வது வார்டில்மீனவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மீனவர் பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் கிராமப் பகுதியிலும், கிராம மக்களுக்கான வாக்குச்சாவடி மையம் மீனவர் பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மீனவர்களும், கிராம மக்களும் அதிகாரிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பகுதி வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். உடனே அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன், மாமல்லபுரம் டிஎஸ்பிஜகதீஸ்வரன் ஆகியோர் மீனவ மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாது என அதிகாரிகள் உறுதியளித்து, அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். பின்னர், 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோல், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் லத்தூர் ஒன்றியத்தின் சில இடங்களில் வாக்குப்பதிவு சீட்டு குறைவாக வழங்கப்பட்டிருந்ததால் வாக்குப்பதிவு தாமதமானது.
பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம் திரிசூலம் ஊராட்சி, ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள அரசுபள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில், ஊராட்சி மன்றத் தலைவருக்கான வாக்குச்சீட்டு 50 மட்டுமே வழங்கப்பட்டு இருந்ததால் காலை9:15 மணிக்கே அந்த சீட்டு காலியானது. இதனால், வரிசையில் காத்திருந்த வாக்களர்கள் வாக்கு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, வாக்குச்சீட்டு கொண்டு வரப்பட்டு, காலை 10:15 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோல் நன்மங்கலம், முடிச்சூர், வேங்கைவாசல் ஊராட்சி பகுதியில் சில வாக்கு மையத்தில் வாக்குச்சீட்டு வருவதில் தாமதமானதால், அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை, தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. 8-வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கல்யாணி என்பவரின் பெயர் மற்றும்சின்னம் ஆகியவை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே ஒட்டப்படவில்லை. இதற்கு, அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அந்த குறை சரி செய்யப்பட்டது.
பல வாக்குச்சாவடிகளில் மழைநீர் தேங்கியும், சேறும் சகதியுமாக காட்சியளித்தன. போதிய வசதிகள் செய்யப்படாததால் வாக்காளர்கள் சிரமத்துடன் நின்று வாக்களித்தனர்.