

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரவில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிங்கம்புணரியில் அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் அருகருகே அமைந்துள்ளன. இங்கு சிங்கம்புணரி, சிவபுரிபட்டி, வேங்கைப்பட்டி, வேட்டையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் அறிவியல் ஆய்வகக் கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் புதிய ஆய்வகம் கட்டவில்லை. மேலும் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இரவு காவலாளியும் இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி வட்டார வள மையக் கட்டிடத்தை இரவு நேரங்களில் மது அருந்தும் ‘பார்’-ஆக சமூக விரோதிகள் மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கரோனா ஊரடங்கு சமயத்தில் பள்ளி மூடியிருந்தபோது பகல், இரவு பாராமல் இப்பள்ளியில் சமூக விரோதிகள் மது குடித்து வந்தனர். தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் மதுக் குடிக்கின்றனர்.
திறந்தவெளியாக இருப்பதால் எளிதில் பள்ளி வளாகத்துக்குள் செல்கின்றனர். இதனால் கட்டாயம் சுற்றுச்சுவர் கட்டுவதோடு, காவலாளியையும் நியமிக்க வேண்டும். மேலும் போலீஸாரும் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என்றனர்.