

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பலத்த மழை பெய்ததால் வீடு இடிந்தது, தண் ணீர் தேங்கியதால் ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டது.
பரமக்குடி நகர், சத்திரக்குடி, மஞ்சூர், பொட்டிதட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
பொன்னையாபுரம் ரயில்வே சுரங்கப் பாதைக்குள் மழைநீர் குளம்போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அந்த வழியாகச் செல்ல முடியாமல் திணறினர். சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் கம்பால் தடுப்பு வேலி அமைக்கப் பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மேம்பாலத்தின் வழி யாகச் சுற்றி செல்கின்றனர்.
கிருஷ்ணா திரையரங்கு பகுதியில் இருந்த மின்மாற்றி வெடித்ததால் நகரில் சுமார் ஒன்றரை மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் வாரியத் தினர் சரி செய்து மின் இணைப்பு வழங்கினர். இந்த கனமழைக்கு பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. வீட்டிலிருந்தவர்கள் உடனே வெளி யேறியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தொடர்ந்து நேற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.