

ஓசூர் ராம்நகர் பள்ளம் பகுதியில் உத்தரபிரதேசம் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த அரவிந்த் (33) வசித்து வருகிறார். பானிப்பூரி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இவருக்கு மனைவி ரூபி (32), மகன் அபிஷேக் (10), மகள் ரோலி (7) உள்ளனர். இவர்களுடன் அரவிந்த் தாய் சந்திராதேவி (70), அரவிந்த் சகோதரர் பீம்சிங் (28) மற்றும் பீம்சிங் மகன் ரித்திக் (8) ஆகியோர் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் படுத்து உறங்கி உள்ளனர். அச்சமயத்தில் சமையல் எரிவாயு கசிந்து வீடு முழுவதும் பரவியது.
இதைக் கவனிக்காத ரூபி அதிகாலையில் டீ போட ஸ்டவ் பற்ற வைத்துள்ளார்.
அப்போது காஸ் கசிவால் தீ பற்றி சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த 3 குழந்தைகள், 2 பெண்கள், 2 ஆண்கள் என 7 பேரும் படுகாய மடைந்தனர். வீட்டின் மேற்கூரை உடைந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த நகர காவல் நிலைய போலீஸார், காயடைந்த அனைவரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓசூர் நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.