

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைதுறை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்காச்சோளம் பயிர் சாகுபடி பரப்பில் மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இதில், 90 சதவீத சாகுபடி பரப்பு மானாவாரி முறையில் புதூர், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களில் செய்யப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு, வேளாண் துறையின் பரிந்துரையை பின்பற்றி, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலம் விவசாயிகள் இதை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளான கோடை உழவு, வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி, பயிர் இடைவெளி பராமரிப்பு, வரப்பு பயிர் சாகுபடி, இனக்கவர்ச்சி பொறி வைத்தல், ரசாயன மருந்து தெளித்தல் ஆகிய நுட்பங்களை பயன்படுத்தி மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இம்முறைகளில், வரப்பு பயிர் சாகுபடிமுறை மூலம் படைப்புழுத் தாக்குதல் அதிகளவில் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த ஆண்டு கயத்தாறு மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் வரப்பு பயிர் சாகுபடி முறையைக் கடைபிடித்து, அதனை 100 சதவீதம் சரி என நிரூபித்துள்ளனர்.
மக்காச்சோளம் வயலைச்சுற்றி 4 வரிசைநாற்றுச் சோளம் வரப்பு பயிராக அவசியம்விதைக்க வேண்டும். இதன்மூலம், படைப்புழுக்கள் மக்காச்சோளத்தில் முட்டையிடுவது தவிர்க்கப்பட்டு, நாற்றுச் சோளப்பயிரில்முட்டையிடும். மேலும் முட்டையில் இருந்துவெளிவரும் புழுக்கள் நாற்றுச் சோளப்பயிரின் கடினத் தன்மை காரணமாக முழு வளர்ச்சி அடைய இயலாமல் போகிறது. இத்துடன் விதை நேர்த்தியாக சயாண்டிதிணிபுரோல் 10 தயோ மீத்தாக்சேம் என்ற மருந்தினை 1 கிலோ விதைக்கு 4 மில்லி என்ற அளவில் விதைநேர்த்தி செய்து விதைக்கும் போது படைப்புழுதாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.