

வடலூரில் வள்ளலாரின் 199-வதுஅவதார தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமலிங்க அடிகளார் 5.10.1823 அன்று கடலூர் மாவட்டம் வடலூர்அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தார். அவர், சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கி, பசிப்பிணியை போக்க வடலூரில் சத்திய ஞான சபை, தரும சாலையை தொடங்கினார். புலால் உண்ணாமை, ஜோதி வழிபாட்டை வலியுறுத்தி வந்தார்.
வள்ளலாரின் 199-வது அவதார தின விழா வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு காலை 5 மணியளவில் அகவல் பாராயணம் நடந்தது. தொடர்ந்து 6.30 மணியளவில் தரும சாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்திலும் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இரு இடங்களிலும் சிறப்பு அன்னதானம் நடந்தது.
சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தெய்வ நிலைய செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜா சரவணக்குமார் செய்திருந்தார்.
இந்நிகழ்வுக்கு இடையில், ‘வள்ளலார் பிறந்தநாள் இனிதனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும்’ என்ற முதல்வரின் அறிவிப்பு வெளியானது. வடலூரில் சத்திய ஞான சபை மற்றும் சுற்றுவட்டார சன்மார்க்க அன்பர்கள் இதை கேள்வியுற்று மகிழ்ச்சியடைந்தனர்.