

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருக்கு, சென்னையை சேர்ந்த பக்தர் ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ளித் தடிகளை காணிக்கையாக வழங்கினார்.
பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருக்கு விழாக் காலங்களில் உற்சவங்கள் நடைபெறும். அப்போது தாயாரை சுமந்து செல்லும் வகையில், சென்னையைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்ற பக்தர், ரூ.20 லட்சம் மதிப்பில் 9 அடி ஆலமரவிழுதைப் பயன்படுத்தி செய்யப்பட்ட வெள்ளித் தடிகளை காணிக்கையாக வழங்கினார்.
இவை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, ரங்கம் மத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில், வரதராஜப் பெருமாள் கோயில் தாயார் சந்நிதியில் வழங்கப்பட்டது. முன்னதாக, இவை தாயார் சந்நிதியில் வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, விழாக் காலங்களில் இவற்றைப் பயன்படுத்துவதற்காக, கோயில் செயல் அலுலலர் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டன.