

வால்பாறை தெப்பக்குளம் மேட்டில் இடம் தர வலியுறுத்தி கொட்டும் மழையில் கல்லார்குடி காடர் பழங்குடியின மக்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார்குடி பழங்குடியின கிராமத்தில், கடந்த 2018ல் பெய்த கனமழையில் வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளை இழந்த பழங்குடி மக்கள், தற்காலிகமாக தாய்முடி டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன உரிமை சட்டப்படி, மாற்று இடமான தெப்பக்குளம் மேட்டுப்பகுதியில் வீடு கட்ட இடம் வழங்கக்கோரி, தாய்முடி எஸ்டேட் பகுதியில் பழங்குடியின மக்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் சுபம் ஞானதேவ் ராவ், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் கணேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் முடிவு எட்டப்படாத நிலையில், முதல்வர் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கொட்டும் மழையில் தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.