

இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் 10-ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ள திருக்குடைகளுக்கு சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்து தர்மார்த்த சமிதியின் தமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ஆண்டுதோறும் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. வரும் 10-ம் தேதி திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கரோனா கட்டுப்பாடுகளால் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இந்த ஆண்டு நடைபெறவில்லை.
இந்நிலையில், சென்னை பட்டாளத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, திருக்குடைகளுக்கு பூஜை செய்யப்பட்டது. இதில் இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி மற்றும் பக்தர்கள் சிலர் பங்கேற்றனர்.
சிறப்பு பூஜை நிகழ்வை யூ-டியூப், முகநூலில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் திருக்குடைகளுக்கு நாளை சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. இதைத் தொடர்ந்து, வரும் 9-ம் தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 2 திருக்குடைகளும், 10-ம் தேதி திருமலை ஏழுமலையான் கோயிலில் 9 திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.