இதயவியல் மருத்துவ நிபுணர்களின் 2 நாள் மாநாடு நெல்லையில் தொடக்கம் :

திருநெல்வேலியில் நேற்று தொடங்கிய  இதயவியல் மாநாட்டில் பங்கேற்ற இதயவியல் மருத்துவ நிபுணர்கள்.              படம்: மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் நேற்று தொடங்கிய இதயவியல் மாநாட்டில் பங்கேற்ற இதயவியல் மருத்துவ நிபுணர்கள். படம்: மு. லெட்சுமி அருண்
Updated on
1 min read

அகில இந்திய இதயவியல் சங்கத்தின் திருநெல்வேலி மண்டல கிளை சார்பில் 2 நாள் இதயவியல் நிபுணர்களின் மாநாடு நேற்று தொடங்கியது.

நாடு முழுவதும் உள்ள இதயவியல் மருத்துவ நிபுணர்களை அங்கமாக கொண்டு அகில இந்திய இதயவியல் சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளையின் சார்பில் இவ்வாண்டுக்கான மாநாடு திருநெல்வேலியில் நேற்று தொடங்கியது. சங்கத்தின் தேர்வுத் தலைவரும், மாநாட்டு அமைப்புச் செயலாளருமான டாக்டர் ஜெ.எம். ரவி எட்வின் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டு அமைப்புத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.எல். சுபுகானி வரவேற்றார். சங்கத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். வீரமணி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் நோக்கம் குறித்து டாக்டர் ரவி எட்வின் கூறியதாவது:

இதயவியல் துறையில் நவீன சிகிச்சை முறைகள், நவீனஉபகரணங்கள் பயன்பாடு, மருந்துகள் குறித்து மருத்துவர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் எடுத்துரைக்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் முதுநிலை மாணவ, மாணவிகள் 60 பேர் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள்.

திருநெல்வேலி, கோவை, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், சேலம், மதுரை ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து காணொலி காட்சி மூலம் நவீன சிகிச்சை உபகரணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இதயவியலில் நவீன பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளான ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, எக்கோ கார்டியோகிராம் ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து நேரடி செயல்முறை விளக்கமும் அளிக்கப்படுகிறது.

இந்திய அளவில் தலைசிறந்த இதயவியல் நிபுணர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசுகிறார்கள். கருத்தரங்கம், ஆய்வரங்கம், பயிற்சி பட்டறை, சொற்பொழிவு என்று 2 நாள் நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் இணையதளம் மூலம் கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in