மருத்துவத் தாவரங்கள் வண்ணக் கையேடு :

மருத்துவத் தாவரங்கள் வண்ணக் கையேடு :
Updated on
1 min read

தாவரங்கள், குறிப்பாக மருத்துவத் தாவரங்கள் குறித்த வளமான மரபு நமக்கு உண்டு. அதே நேரம், மருத்துவத் தாவரங்களை அடையாளம் காணவோ, அவற்றின் சரியான பெயரை அறியவோ, அவற்றின் பயன்களை அறிவதோ அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. இந்த நிலையில் வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள 954 இந்திய மருத்துவத் தாவரங்களைப் பற்றிப் பேசுகிறது ‘Compendium of Traded Indian Medicinal plants’ என்கிற ஆங்கில நூல்.

இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 178 தாவர இனங்கள், மருத்துவத் தேவைகளுக்காக மிக அதிக அளவில் விற்பனை செய்யப்படுபவை. எஞ்சிய 776 தாவரங்களும் சிறிய அளவிலாவது வர்த்தக மதிப்பு கொண்டவை. உள்ளூர் பெயர்கள், விற்பனை செய்யப்படும் பாகம் குறித்த விளக்கம், விற்பனைத் தகவல், வகைப்பாட்டியல் விளக்கம், வாழிடம், இந்தியா-உலகத்தில் பரவிக் காணப்படும் நிலை, மருத்துவப் பயன்கள் போன்றவை இந்த நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, நாட்டு மருத்துவம் என எந்த மருத்துவ முறையில் இந்தத் தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 736 தாவரங்களுக்கு அவற்றின் முழுமையான, பாகங்கள் குறித்த தனித்தனி படங்கள் கொடுக்கப்பட்டிருப்பது, இந்தத் தாவரங்களை எளிதில் அடையாளம் காண உதவும்.

மருந்துப் பொருள் விற்பனையாளர்கள் மட்டுமல்லாமல் தாவரவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், காட்டு வளங்கள் சார்ந்து செயல்படுவோர் எனப் பலருக்கும் இந்த நூல் உதவியாக இருக்கும். மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் பெங்களூருவைச் சேர்ந்த Foundation for Revitalisation of Local Health Traditions (FRLHT) இந்த நூலைத் தொகுத்து வண்ணத்தில் வெளியிட்டுள்ளது.

Compendium of Traded Indian Medicinal Plants, K. Ravikumar, S. Noorunnisa Begum, D.K. Ved, J.R. Bhatt and G.S. Goraya, தொடர்புக்கு: FRLHT, 74/2, Jarakabande Kaval, Attur Post, via Yelahanka, Bengaluru – 560064, தொலைபேசி: 91 80 28568000

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in