

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைக் கட்டுப்படுத்துவதற் காக நேற்று முன்தினம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி தலைமையிலான போலீஸார் மணப்பாறையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்து ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி தலைமையிலான போலீஸார் முசிறியிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த பத்திர எழுத்தர்கள் உள்ளிட்ட 6 பேரிடமிருந்து ரூ.1.38 லட்சம், தரையில் வீசப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.1.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பத்திர எழுத்தர்களான கனகசபை, ராஜாராம் உட்பட 6 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில், அலுவலக உதவியாளர் இளங்கோவனிடம் ரூ.2,500, ரியல் எஸ்டேட் தரகர் ராஜ்குமாரிடம் ரூ.1,20,000 என ரூ.1,22,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, சார் பதிவாளர் விஜயன், இளங்கோவன், ராஜ்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் கீழப் பழுவூர் அருகேயுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் ரூ.65,720 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.பெரியசாமி, இடைத்தரகர்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனையில், ரூ.29 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.