

திருநெல்வேலி சந்திப்பில் அரவிந்த் கண் மருத்துவமனை முன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேருந்து நிறுத்தம் கடந்த சில நாட்களுக்குமுன் திடீரென்று கொக்கிரகுளத்துக்கு மாற்றப்பட்டது. முன்னறிவிப்பு இல்லாமல் போக்குவரத்து போலீஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து இப்பகுதியில் போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் அங்்கு பேருந்து நிறுத்தம் செயல்பட அனுமதிக்கப்பட்டது. அங்கு பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க போலீஸார் அனுமதி வழங்கினர். போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை வெகுநேரம் அங்கு நிறுத்தி வைக்க போலீஸார் தடைவிதித்தனர்.