

பெரணமல்லூரில் குடிசை வீடுகள் அகற்றப்பட்டதை கண்டித்து வந்த வாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடியினர் நேற்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூரில் உள்ள புறம்போக்கு இடத்தில், 13 இருளர் குடும்பங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையிலான வருவாய்த் துறையினர் 13 குடிசைகளை நேற்று முன் தினம் அகற்றினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத் தில் பாத்திரங்கள், அடுப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் குடியேறும் போராட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இருளர் குடும்பத்தினர் நேற்று ஈடுபட்டனர். முன்னதாக, இருளர் பழங்குடி இன மக்களுக்கு நீதி மற்றும் வீடு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், முன் அறிவிப்பின்றி குடிசை வீடுகளை அகற்றிய வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவக்குமார் கூறும்போது, “பெரணமல்லூரில் 13 இருளர் பழங்குடியின குடும்பங் களுக்கு குடிசை அமைத்துக் கொள்ள கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அனுமதித்தனர். அதன்படி குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையில், முருகன் கோயிலுக்கு இடம் தேவை என கூறி ஒரு தரப்பு மக்கள் பிரச்சினை எழுப்பினர். கடந்த 3 மாதங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த 19-ம் தேதி, ஒரு குடிசையை ஒருவர் பிரிக்க முயன்றார். இதனால் மீண்டும் பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில், பெரணமல்லூரில் முருகன் கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தவறான தகவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு முன்னறிவிப்பு இல்லாமலும், 13 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுக்காமலும், 13 குடிசைகளை நேற்று (நேற்று முன் தினம்) அகற்றியுள்ளனர்.
குடிசை வீடுகளை அகற்றும் பணியை தொடங்கியபோது, ஆட்சியரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை. அவரது உதவியாளர் மற்றும் செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் ஆகியோரை தொடர்பு கொண்டு குடிசைகளை அகற்ற வேண்டாம் என கேட்டுக் கொண்டோம். அவர்களும், அகற்றமாட்டார்கள் என உறுதி அளித்தனர். ஆனாலும், 13 குடிசைகளையும் அகற்றிவிட்டனர். இப்போது, வசிக்க இடம் இல்லாமல், 13 இருளர் குடும்பங்களும் நடுவீதியில் நிற்கின்றனர். குழந்தைகளுடன் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நீதி கேட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், மீண்டும் குடிசை வீடுகளை கட்டிக் கொடுக்கும் வரை, வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் இருளர் பழங்குடியின மக்கள் ஈடுபட்டுள்ளனர். மாற்று இடம் கொடுக்கப்படும் என தொடர்பு கொண்டு பேசிய போது, கோட்டாட்சியர் விஜயராஜ் தெரிவித்துள்ளார்.
அவரிடம், ஒதுக்கப்படும் மாற்று இடத்தில் தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், அதுவரை, அவர்களுக்கு தற்காலிகமாக குடிசை வீடு அமைத்துக் கொடுக்க வேண்டும்.
குடிசை வீடு கட்டிக் கொடுக்கும் வரை குடியேறும் போராட்டம் தொடரும்” என்றார். இதனால், வட்டாட்சியர் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் 8 இருளர் பழங்குடியினர் குடும்பங்களுக்கு வருவாய்த் துறையினர் வீட்டு மனைப்பட்டா நேற்று வழங்கினர். இதையடுத்து 11 மணி நேரம் நடைபெற்று வந்த குடியேறும் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பெரணமல்லூர் அருகே சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து வசித்து வந்த இருளர் பழங்குடியினர் நேற்று முன் தினம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு பணி நேற்று நடைபெற்றது. பெரணமல்லூர் அடுத்த வடுகன்குடிசை பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய வருவாய்த் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரணமல்லூரியில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.