காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் - ஆர்டிஓ சோதனைச்சாவடியில் ரூ.77 ஆயிரம் பணம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி . படம்: வி.எம்.மணிநாதன்.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி . படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி இயங்கி வருகிறது. இங்கு, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு, சுற்றுலா மற்றும் பயணிகள் முறையான அனுமதி பெற்று வருகின்றார்களா? என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் விஜய் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (தொழில்நுட்பம் அல்லாத பணி) பிரேம ஞானகுமாரி (55) என்பவர் பணியில் இருந்தார். அவர் வைத்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்ததுடன் அந்த அறையை சோதனையிட்டனர். அதில், பிரேம ஞானகுமாரியின் பையில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.15 ஆயிரமும், பிற பகுதிகளில் மறைத்து வைத்திருந்த பணம் என மொத்தம் ரூ.77 ஆயிரத்து 110 பறிமுதல் செய்தனர்.

அதேபோல், சோதனைச்சாவடி பணிகளுக்கு உதவியாக ஒரு சுழற்சிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை அங்கு பணியில் அமர்ந்தி இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு சோதனைச்சாவடி மூலம் கிடைக்கும் லஞ்சப் பணத்தில் இருந்து மாதந்தோறும் சம்பளம் வழங்கி வந்ததும் தெரியவந்தது.

அதற்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், கணக்கில் வராத பணம் பறிமுதல் தொடர்பாக பிரேம ஞானகுமாரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், வேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் இறுதியாக கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 400 தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இணை சார் பதிவாளர் வனிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in