கரோனாவால் பெற்றோரை இழந்த 338 குழந்தைகள் உதவிக்கு காத்திருப்பு :

கரோனாவால் பெற்றோரை இழந்த 338 குழந்தைகள் உதவிக்கு காத்திருப்பு :

Published on

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் 338 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களில் 18 குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பிரியாதேவி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 338 குழந்தைகள், கரோனா தாக்கம் காரணமாக, தங்களது பெற்றோர்களில் ஒருவரை இழந்து உள்ளனர். இதில் 11 குழந்தைகள், ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் தங்களது பெற்றோரில் ஒருவரை இழந்து உள்ளனர். தற்போது இவர்களின் பெற்றோர்களில் ஒருவர், கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் 11 குழந்தைகள், தற்போது தாய், தந்தை இல்லாமல் உறவினர்கள் ஆதரவுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

இந்த 11 குழந்தைகளில் முதல் கட்டமாக 4 குழந்தைகளுக்கு, அரசின் சார்பில், ஏற்கெனவே தலா ரூ. 5 லட்சம் வீதம், ரூ. 20 லட்சம் அவர்களது பெயரில் வைப்பு நிதி தொகையாக வங்கி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 18 வயது பூர்த்தி ஆனதும், முதிர்வு தொகை வட்டியுடன் கிடைக்கும்.

மேலும், இவர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 7 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கரோனாவால் தங்களது பெற்றோர்களில் ஒருவரை இழந்த 327 குழந்தைகளில், 14 குழந்தைகளுக்கு அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள குழந்தைகளுக்கு, படிப்படியாக அரசின் சார்பில் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in