

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களின் உடமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சாகுல் அமீது(42), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள கருவன்குப்பத்தைச் சேர்ந்த வினோத் (27) ஆகியோர் சமையல் செய்ய பயன்படுத்தும் சாதனங்களுக்குள் மறைத்து தலா 2 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர், சாகுல் அமீது, வினோத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.86 கோடி இருக்கும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.