

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தற்போது தினசரி சராசரியாக 180 டன் திடக்கழிவுகள் சேருகின்றன. இதில் சுமார் 70 முதல் 80 டன் உயிரி கழிவுகள் மாநகராட்சி பகுதியில் 11 இடங்களில் உள்ள 16 நுண் உரம்செயலாக்க மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு இந்த கழிவுகளை கம்போஸ்ட் உரமாக மாற்ற 45 முதல் 60 நாட்கள் ஆகிறது.
மாநகராட்சி சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உயிரி கழிவுகளை விரைவாக கம்போஸ்ட் உரமாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி சார்பில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சங்கரன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் தி.சாரு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
வேளாண் வேதியியல் துறை தலைவர் சா.சுரேஷ் வரவேற்றார். மாநகராட்சி நகர்நல அலுவலர் வி.வித்யா பேசினார். அங்கக கழிவுகளை உரமாக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற உயிரி தொழில்நுட்ப முறைகள் குறித்து கல்லூரியின் இளநிலை மாணவ ஆராய்ச்சியாளர்கள் க.தாரணி, ம.எழிலரசன் ஆகியோரும், நுண்உரமாக்கும் மையங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இணை பேராசிரியர் ப.பாக்கியத்து சாலிகாவும் பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து பிற்பகலில் பெருமாள்புரம் நுண் உரமாக்கும் மையத்தில், உயிரிகழிவுகளை மட்க்கச் செய்யும் மேம்படுத்தப்பட்ட கம்போஸ்ட் தொழில்நுட்பம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் மாநகராட்சி பணியாளர்கள் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.