

அந்தியூரில் வெடி விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும் பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த தீபக் என்பவரது வீட்டில் கூரை சீரமைப்புப் பணியின் போது விபத்து ஏற்பட்டது.
இதில் சங்கராபாளையத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (35) உயிரிழந்தார். அவரது உறவினர்கள், முருகன், விமலானந்த் மற்றும் பிரியா ஆகியோர் காயமடைந்தனர். வெல்டிங் இயந்திரம் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில், பட்டாசு துகள்கள் மற்றும் வெடிமருந்து சிதறிக் கிடந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த வெற்றிவேலின் உறவினர்கள் நேற்று அந்தியூர் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது
வெல்டிங் இயந்திரத்தை இயக்குவதில் வெற்றிவேலுக்கு நல்ல பயிற்சி உண்டு. வெல்டிங் இயந்திரம் வெடித்ததால் விபத்து நடக்கவில்லை.
அதேபோல், பட்டாசு வெடித் திருந்தால் இந்த அளவு பலத்த காயம் ஏற்பட்டு இருக்காது. அவர் பணி மேற்கொண்ட பகுதியில் வெடிமருந்துகள் இருந்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு விபத்தில் இறந்த வெற்றிவேலின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில். அம்மாபேட்டை இன்ஸ் பெக்டர் கிருஷ்ணமூர்த்தி , துணை வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெடிபொருட்கள் மூலம் விபத்து ஏற்பட்டு இருப்பின் வீட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றிவேல் குடும்பத்துக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அந்தியூர் - பர்கூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.