ஈரோட்டில் இளம் பெண் உயிரிழப்பு எதிரொலி - பானிபூரி, சாலையோரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு :

ஈரோடு சாலையோர பானிபூரி கடைகள், ஓட்டல் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு சாலையோர பானிபூரி கடைகள், ஓட்டல் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
Updated on
1 min read

ஈரோட்டில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு சூரம்பட்டி காந்திநகர் என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ரோகிணிதேவி (34). இரு நாட்களுக்கு முன்பாக, சகோதரர்கள் வாங்கிக் கொடுத்த பானிபூரியை ரோகிணி தேவி சாப்பிட்டுள்ளார். சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோகிணிதேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இறப்புக்கான காரணம் கண்டறிவதற்காக உடல் உறுப்புகள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பானி பூரிக்கடை மூடப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன் தினம் ஈரோட்டில் உள்ள சாலையோர பானிபூரி கடைகள், உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலை, காளைமாடு சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சில சாலையோர கடைக்காரர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உள்ளது தெரிய வந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

அவர்களுக்கு உரிமம் பெறுவதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி கூறுகையில், ரோகிணி தேவியின் உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இருப்பினும், பானிபூரி கடைகளில் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடக்கவுள்ளது. பொதுமக்கள் உணவு சம்பந்தமான புகார்களை 9444042322 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in