

காஞ்சிபுரம் அடுத்த நத்தப் பேட்டை கிராமத்தில் வசித்தவர் பச்சையப்பன் மனைவி லட்சுமி (75). இவர், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு செல்வதற்காக வெம் பாக்கம் அடுத்த மாங்கால் கூட்டுச் சாலைக்கு கடந்த 25-ம் தேதி வந்துள்ளார்.
பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி மீது, காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
இது குறித்து தூசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.