

சங்ககிரியில் மகன், மகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸார் மீட்டனர். மேலும், 3 பேரின் உயிரிழப்பு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிரங்காட்டுப்பட்டி அடுத்த மங்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (33). இவரது மனைவி முருகேஸ்வரி (27). இவர்களது மகன் சீனிவாசன் (9), மகள் கிருஷ்ணப்பிரியா (5). முருகன் தனது குடும்பத்தினருடன் சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூரில் உள்ள தாபாவில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். மேலும், குடும்பத்தினருடன் அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பணியின்போது, சுடுநீர் கொட்டியதில் முருகனுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை காய்கறி வாங்கி வருவதாகக் கூறி தனது மகன் மற்றும் மகளை முருகன் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதனிடையில், இரவு 8 மணியளவில் தனது குழந்தைகள் இருவரும் இறந்து கிடக்கும் வீடியோ பதிவை முருகன் தனது உறவினர்களுக்கு அனுப்பியதுடன், “இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள்... எங்களை கொல்லனும்னு முடிவு பண்ணீங்க, இப்போ பார்த்துக்கோங்க” என முருகன் பேசிய பதிவும் இடம் பெற்று இருந்தது.
இதுதொடர்பாக, முருகனின் மனைவி முருகேஸ்வரி சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி மூவரையும் தேடினர். இதனிடையே, நேற்று சங்ககிரி சேலம் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் முருகன், அவரது இரு குழந்தைகளுடன் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீஸார், மூவரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக முருகன் விபரீத முடிவு எடுத்திருக் கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.