தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரம் - அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயிக்க கோரிக்கை :

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரம் -  அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயிக்க கோரிக்கை :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கூடுதல் வாடகை வசூலிப்பதாக குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், சரியான வாடகை கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்கும் முன்பே அறுவடையை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் விவசாயிகள் அறுவடை பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போதியளவு நெல் அறுவடை இயந்திரங்கள் இல்லாததால், வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அறுவடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால், நெல் அறுவடையின்போது கூடுதல் நேரம் ஆவதால், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. நெல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு கடந்த ஆண்டு ரூ.1,800 என கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.2,500 வசூலிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, இவ்விவகாரத்தில் ஆட்சியர் உடனடியாக தலையிட்டு விவசாயிகள், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வேளாண்மை துறையினர் மற்றும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி, சரியான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in