

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை ஏறத்தாழ 3 மணிநேரத்துக்கு விடாமல் கொட்டித் தீர்த்தது. அதன்படி, மணப்பாறையில் 11.3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால், காடுமுனியப்பன் கோயில் ஊரணி, அப்பு ஐயர் குளம், அத்திக்குளம், கரிக்கான் குளம் ஆகிய நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி அருகிலுள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
தகவலறிந்த எம்எல்ஏ அப்துல் சமது, வட்டாட்சியர் லஜபதிராஜ், நகராட்சி ஆணையர் செந்தில் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை அருகிலுள்ள பள்ளிவாசல், மாரியம்மன் கோயில் மண்டபம் ஆகியவற்றில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, வீடுகளை சூழ்ந்த மழைநீர் வடிய வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுகுறித்து மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் கூறியது: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் மணப்பாறையில் ராஜீவ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதற்கு காரணம் முறையான வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததே ஆகும். மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, இந்த வாய்க்கால்களை சீர்படுத்த வேண்டும் என்றார்.