சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் - முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு : பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில்  -  முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு :  பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை
Updated on
1 min read

சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வடவாறு, கான்சாகிப் வாய்க்கால், வடக்கு ராஜன் வாய்க்கால், பழையகொள்ளிடம் ஆறு, கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் அதிக அளவில் முதலைகள் உள்ளன.

இந்த முதலைகள் நீர் நிலைகள் ஓரமாக மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்று கொன்று விடுகின்றன. நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் பொதுமக்களையும் முதலைகள் கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்று விடுகின்றன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 6-ம் தேதி கிள்ளைப் பகுதியை சேர்ந்த ஒருவரையும், தவர்த்தாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் முதலை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர். கடந்த 14-ம் தேதி சிதம்பரம் அருகே உள்ள பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பழைய கொள்ளிடத்தில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை கடித்து உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வத்தின் உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் அஜிதா, வனக்காப்பாளர்கள் அனுசுயா, சரளா ஆகியோர் கொண்ட குழுவினர் சிதம்பரம் அருகே உள்ளபழையநல்லூர், அகரநல்லூர்,வேளக்குடி ஆகிய கிராமங்களில் நேற்று முதலை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

“இப்பகுதி முதலைகள் உள்ள பகுதி; இங்கு வாய்க்காலில் இறங்கி குளிப்பதோ, துணி துவைப்பதோ ஆபத்தான செயலாகும், எனவே பொதுமக்கள் வாய்க்கால்களில் இறங்காமல் இருக்க வேண்டும்” என்று அப்போது அவர்கள் எடுத்துக் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in