

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்துள்ள எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், அவர் இருக்கும் மாநிலத்தில் ரேஷனில் உணவு தானியத்தை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணிபுரியும் தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராயினும், ரேஷன்கார்டு வைத்திருந்தால், அவர் இருக்கும் மாநிலத்தில் அவரது குடும்பத்துக்கான உணவு தானியத்தை பெற முடியும். இத்திட்ட பயனாளிகள், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டை(PHH) அல்லது அந்தியோயா அன்ன யோஜனா அட்டை (AYY) ஆகியவற்றின் கீழ் ரேஷன் அட்டை பெற்றிருக்க வேண்டும். அந்த அட்டையினை இங்கு கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பயனாளியின் ஆதார் அட்டை எண் மற்றும் கைரேகை பதிவுகள் சரிபார்த்த பின்னர் எந்த ரேஷன் கடையில் இருந்தும் அரிசி அல்லது கோதுமையை மட்டும் அவரது குடும்பத்தின் தகுதியுடைய அளவுக்கு பெற்றுக் கொள்ள இயலும். அவரது மாநிலத்தில் அரிசி அல்லது கோதுமை இலவசமாகவோ அல்லது மிக குறைந்த விலையிலோ வழங்கப்பட்டாலும், இத்திட்டத்தினை பயன்படுத்தும் பயனாளி, மத்திய அரசு நிர்ணயத்தின்படி அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.3 மற்றும் கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ.2 விலை செலுத்தி பெற வேண்டும். இத்திட்டத்தில் அரிசி மற்றும் கோதுமை தவிர கூட்டுறவு அங்காடி விற்பனை செய்யப்படும் இதர வெளி மார்கெட் பொருட்களை உரிய விலையில் பெற இயலும்’ என்று தெரிவித்துள்ளார்.