

ஊரக உள்ளாட்சி தேர்தலை வெளிப் படையாகவும், சுமூகமாகவும் நடத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடை பெற்றது. மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான அமர் குஷ்வாஹா, எஸ்.பி., டாக்டர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் தலைமை வகித்துப் பேசும்போது, ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி களில் விவரங்கள், அதில் பதட்டமான வாக்குச்சாவடி குறித்த விவரங்கள், வீடியோ எடுக்க வேண்டிய மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். தேர்தலை முன்னிட்டு மைக்ரோ பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். வாக்குப் பதிவு அலுவலர்களை நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை வெளிப் படையாகவும், சுமூகமாகவும் நடத்த வேண்டும். கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி தெளித்து முன் தடுப்புப்பணிகளை அவசியம் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குநர் உமாமேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களாகவும், வாக்குப் பதிவு அலுவலர்களாக பணியாற்ற அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர் களுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (24-ம் தேதி) 6 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு நாளில் எவ்வாறு செயல்பட வேண்டும். அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு நாளில் என்னென்ன பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் செய்ய பணிகள் என்ன என்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப் படவுள்ளன. எனவே, தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் இந்த பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.