

தாராபுரத்தில் காங்கிரஸ் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்.10-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், அப்போதைய தமிழக முதல்வர்ஜெ.ஜெயலலிதாவை அவதூறாகபேசியது, பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசியதாக, முன்னாள் மத்திய அமைச்சரும்,தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது, தாராபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
தாராபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள், வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வழங்கப்பட்டுள்ள உத்தரவின்படி, சிறப்புநீதிமன்றமான திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-க்கு மாற்றப்பட்டது.
இதில் நேற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஜரானார். அவர் சார்பில் வழக்கறிஞர் கே.தென்னரசு வாதாடினார்.ஆட்சியர் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையிலான கட்சியினர் அங்கு திரண்டனர். வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி (பொ) கார்த்திகேயன் உத்தரவிட்டார்.