தாமதமின்றி சாதிச் சான்று வழங்கக்கோரி - சேலத்தில் மலைவாழ் மக்கள் தர்ணா :

தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட ஜருகுமலை பகுதி மலைவாழ் மக்கள்.				படம்: எஸ்.குரு பிரசாத்
தாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட ஜருகுமலை பகுதி மலைவாழ் மக்கள். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

தாமதமின்றி சாதிச் சான்று வழங்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜருகுமலை பகுதி மலைவாழ் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சின்ராஜ், மனோகரன் உள்ளிட்டோர் கூறியதாவது:

ஜருகுமலை மற்றும் அதன் அடிவாரப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்களுக்கு இந்து-மலையாளி என்ற பிரிவில் பழங்குடியினர் (எஸ்டி) சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் 6 மாதம் கழித்துதான் வழங்குகின்றனர்.

இதனால், அரசு திட்டங்களில் சலுகைகள் பெற விண்ணப்பிக்க முடியவில்லை.

தற்போது பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்துள்ள எங்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற 200-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சான்றிதழ் வழங்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையில், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி பேச்சுவார்த்தை நடத்தி தர்ணாவை கைவிடச் செய்தார்.

இதுதொடர்பாக கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி கூறியதாவது:

வருவாய்த்துறை சான்றிதழ்கள் அனைவருக்கும் ஆன்லைனில் வழங்கப்படுவதுபோல, பழங்குடியின மக்களுக்கும் ஆன்லைனின் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜருகுமலை பகுதி மக்கள் நேரடியாக விண்ணப்பித்துள்ளதால், தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனினும், விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து சாதிச் சான்றிதழ் வழங்க ஆவண செய்யப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in