

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி ஆகியவை ஆண்டுதோறும் நடத்தப்படும்.
இதேபோல செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசனின்போது தோட்டக்கலைத் துறை மூலம் இரு வாரங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
அரசு தாவரவியல் பூங்காவில் இந்தாண்டு இரண்டாம் சீசனை முன்னிட்டு, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல வண்ணங்களில் இன்கா மேரிகோல்டு, பிரஞ்சு மேரிகோல்டு, கெலண்டுல்லா, லூபின், பிளாக்ஸ் உட்பட 150 ரகங்களில் 2.20 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தாண்டு சிறப்பு அம்சமாக கிரைசாந்தியம் வகையில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை போன்ற 10 வண்ணங்களில் ஆயிரம் மலர்த் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர்த் தொட்டிகளை மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.