

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கேற்ப அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 73.61 அடியாக இருந்த நிலையில், டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நீர் வரத்து 12 ஆயிரத்து 112 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில், அணைக்கான நீர் வரத்து நேற்று விநாடிக்கு 10 ஆயிரத்து 277 கனஅடியாகக் குறைந்தது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கான நீர் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை 11 மணியிலிருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் நேற்று 72.97 அடியாகவும், நீர் இருப்பு 35.30 டிஎம்சி-யாகவும் இருந்தது.