திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் - 1,707 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் : 1.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

சென்னை புறநகர் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நேற்று பரபரப்பாக நடைபெற்றது. தாம்பரம் மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் நகராட்சியினர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊசி போட்டனர். (அடுத்த படம்) தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோடு சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் ஆர்வமாக கலந்துகொண்ட மக்கள்.படங்கள்:எம்.முத்துகணேஷ்
சென்னை புறநகர் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நேற்று பரபரப்பாக நடைபெற்றது. தாம்பரம் மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் நகராட்சியினர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊசி போட்டனர். (அடுத்த படம்) தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோடு சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் ஆர்வமாக கலந்துகொண்ட மக்கள்.படங்கள்:எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 1,707 இடங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 1,45,486 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 200 இடங்களிலும், காஞ்சிபுரம் நகரத்தில் மட்டும் 30 இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது.சின்னகாஞ்சிபுரம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச் சென்றனர். இந்த முகாம்களில் மொத்தம் 19,467 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் சிறப்பு தடுப்பூசிமுகாம் நடைபெற்றது. மொத்தம் 737 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. திருக்கழுக்குன்றம், வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்சா.செல்வகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரணி, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. மொத்தம் 43,463 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று 770 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இப்பணியை அயப்பாக்கம் ஊராட்சியில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, தொடங்கி வைத்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரை லிட்டர் ஆவின் பால் அல்லது ஆவின் மில்க் ஷேக் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்டஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், திருவள்ளுர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜவஹர்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3,080 பணியாளர்கள் பங்கேற்புடன் மாவட்ட முழுவதும் காலைமுதல், மாலை வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 82,556 பேருக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும், திருவேற்காடு நகராட்சி மற்றும் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு எவர் சில்வர் டிபன் பாக்ஸ், குடம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வழங்கின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in