சுற்றுச்சூழல் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு - விழிப்புணர்வு சைக்கிள் பேரணி :
தூத்துக்குடியில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பருவநிலை மாற்றம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தூத்துக்குடி பசும்பொன் நகர் பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் தி.சாரு மரக்கன்றுகளை நட்டார். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி சார்பில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதேபோல் தூத்துக்குடி யங் இந்தியா அமைப்பு சார்பாக நேற்று காலை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை அமைப்பின் தூத்துக்குடி பிரிவு தலைவர் பொன்குமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோச் பூங்காவில் தொடங்கிய பேரணி படகு குழாம் வரை சென்று திரும்பியது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று, மரம் வளர்த்தல், வனங்களை பாதுகாத்தல், காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் சைக்கிள் மற்றும் எலக்ட்ரிக்கல் வகை மோட்டார் வாகனங்களை பயன்படுத்துதல், நெகிழி (மக்காத பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்த்து பூமியின் வளத்தை பேணுதல் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஏற்பாடுகளை அமைப்பின் துணைத்தலைவர் சில்வியாஜான் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
