ஈரோடு மாவட்டம் கோபியில் கனமழை - அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் : 40 ஏக்கர் கரும்புத் தோட்டம் பாதிப்பு

கோபி பகுதியில் பெய்த கனமழையால் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு  முற்றிலும் சேதம் அடைந்தது. அடுத்தபடம்: கோபி பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்தன.
கோபி பகுதியில் பெய்த கனமழையால் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு முற்றிலும் சேதம் அடைந்தது. அடுத்தபடம்: கோபி பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்தன.
Updated on
1 min read

கோபி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக அரசு சார்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியில் அமைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதில் பல்வேறு சிரமங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் கோபி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்த இடம் இல்லாததால் விவசாயிகள் டிராக்டர் மூலம் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் கூடுதலாக செலவு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கூடுதல் இடவசதியுடன் கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபி மற்றும் அதைச் சுற்றியுள்ள பொலவக்காளிபாளையம், கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம், நாதிபாளையம், கரட்டூர், தாசம்பாளையம், ஒத்த குதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டித் தீர்த்த கனமழையால் கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர் முற்றிலும் காற்றில் சாய்ந்து சேதமடைந்தது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒரு வருட கால பயிரான கரும்பு ஓரிரு வார காலத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழைக்கு ரூ.பல லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in