

மலைவாழ் பழங்குடி மக்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள், சிறுதானிய பிஸ்கெட்டு, தேன் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்ய ஏற்காட்டில் இரு இடங்களில் புதிதாக சூழல் அங்காடி திறக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கல்வராயன் மலை, பச்சை மலை உள்ளிட்ட இடங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியமாக தினை, சாமை, வரகு, பனி வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, நாட்டுக் கம்பு உள்ளிட்டவைகள் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும், வனப்பகுதியில் இருந்து தேனை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி செய்த தானியங்கள், சேகரித்த தேன் ஆகியவற்றை விற்பனை செய்ய வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு தானியங்களை பதப்படுத்தி, விற்பனை செய்தல், தானியங்களில் பிஸ்கெட், மாவு உள்ளிட்ட மதிப்புக் கூட்டுபொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மலைவாழ் பழங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் தானியங்கள், மதிப்புக் கூட்டு பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்தும் வகையில் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்தூர் ஆனைவாரி முட்டல் ஆகிய சுற்றுலா மையங்களில் அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக இரு சூழல் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:
மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சூழல் அங்காடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் வனத்துறை சுற்றுலா மையங்கள் இரண்டில் புதிதாக சூழல் அங்காடிகள் திறக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சூழல் அங்காடிகளில் சிறுதானியங்கள், சிறு தானிய மாவுகள், சிறுதானிய பிஸ்கெட்டுகள், தேன், காபி தூள், மிளகு, மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்பு கவுனி அரிசி, பூங்கார் அரிசி, நிலக்கடலை உள்பட பல வகையான உணவுப் பொருட்கள், தரப்பரிசோதனைக்குப் பின்னர் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.