உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு நடவடிக்கை; வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டும் அனுமதி: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு நடவடிக்கை; வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டும் அனுமதி: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வேட்பாளர் மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13-ம் தேதி அறிவித்தது. 15-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது கரோனா தொற்று பரவாமல் தடுக்க சில கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும்அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார். வேட்பாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரை முன்மொழிபவர் மட்டுமே வேட்பாளரின் சார்பில் நேரில் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில், “வரும் 18-ம் தேதி(நாளை) பொது விடுமுறையாக அறிவிக்கப்படாததால், அரசு விடுமுறை நாளாக இருப்பினும் அன்று வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம்” என கூறப்பட்டுள்ளது.

4,975 வேட்பு மனுக்கள் தாக்கல்

கடந்த இரு நாட்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,840 வேட்புமனுக்கள், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,091 வேட்புமனுக்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 வேட்புமனுக்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் என மொத்தம் 4,975 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in