முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது - மணல் பதுக்கியதாக விரைவில் வழக்கு பதிவு : காவல் துறை அதிகாரிகள் தகவல்

குடியாத்தம்  அடுத்த கொத்தமாரி குப்பம் கிராமத்தில் உள்ள வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண் கல்லூரி. அடுத்த படம்:  ஜோலார்பேட்டையில் வீரமணி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர் நோட்டுகள். கடைசிப்படம்: ஜோலார்பேட்டையில் வீரமணி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.
குடியாத்தம் அடுத்த கொத்தமாரி குப்பம் கிராமத்தில் உள்ள வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண் கல்லூரி. அடுத்த படம்: ஜோலார்பேட்டையில் வீரமணி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர் நோட்டுகள். கடைசிப்படம்: ஜோலார்பேட்டையில் வீரமணி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.
Updated on
2 min read

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது மணல் பதுக்கியதாக விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல், சொகுசு விடுதி, கல்வி நிறுவனம், உறவினர் வீடு என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள கே.சி.வீரமணி வீடு தவிர மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இரவு 7 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரொக்கமாக 34 லட்சத்து 1,060 ரூபாய், 1 லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்கள், ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கணினி ஹார்டு டிஸ்க்குகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 623 பவுன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.

இது தவிர கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள சுமார் 275 யூனிட் மணல் கைப்பற்றப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு மூத்த அமைச்சராக வலம் வந்த கே.சி.வீரமணி பாலாற்றுப்பகுதியில் மணல் கடத்தி வருவதாக ஏற்கெனவே அவர் மீது புகார் எழுந்தது. இது மட்டுமின்றி அமைச்சராக கே.சி.வீரமணி பதவி வகித்தபோது அவர் பல்வேறு இடங்களில் கட்டி வந்த கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல் கட்டுமானப்பணிக்கு பாலாற்று மணல் அதிக அளவில் கடத்தப்பட்டு கட்டிடப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தவிர, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளை யொட்டியுள்ள பாலாற்றுப்பகுதிகளில் இருந்து கே.சி.வீரமணி தனது ஆதரவாளர்கள் மூலம் மணலை கடத்தி ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், இடையம்பட்டி காந்திரோட்டில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் ஆற்று மணல் கைப்பற்றப்பட்டுள்ளது, அவர் மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை உறுதி செய்துள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘கே.சி.வீரமணியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மணல் வருவாய்த் துறை மூலம் அதன் தற்போதைய சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டு, எவ்வளவு யூனிட் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மணல் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்படும்.

அதன்பேரில், அவர்களிடம் புகார் பெறப்பட்டு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது மணல் பதுக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மணல் கடத்தல் தனியாக விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.

ஓசூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சோதனை

கிருஷ்ணகிரி/சென்னை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட்டில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 5 அடுக்கு மாடிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டலில் ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி, ஓட்டல் முன்பு ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த், சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல், சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் வீரமணியின் தொழில் கூட்டாளியும் திருமலா பால் நிறுவன உரிமையாளருமான ஆஞ்சநேயலு வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சென்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வருவாய்த்துறையினர் உதவியுடன் அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டு அது தொடர்பான நோட்டீஸ் வீட்டின் சுவரில் ஒட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in