சிவகங்கை ஆட்சியர் எச்சரித்தும் பயனில்லை ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் :

சிவகங்கை ஆட்சியர் எச்சரித்தும் பயனில்லை ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரித்தும் கிராமப்புற ரேஷன்கடைகளில் தொடர்ந்து தரமற்ற அரிசியே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகள் மூலம் 4.02 லட்சம் கார்டுதாரர்களுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன்கடைகளில் பழுப்புநிற தரமற்ற அரிசி விநியோகம் செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது. சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மஜித் ரோடு ரேஷன் கடையில் விநியோகித்த தரமற்ற அரசியை கார்டுதாரர்கள் சாலையில் கொட்டி போராட்டம் செய்தனர்.

இதையடுத்து தரமற்ற அரிசியை விநியோகிக்கக் கூடாது. தரமற்ற அரிசி இருந்தால் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் ஒப்படைக்க வேண்டுமென ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். மேலும் மாவட்டத்தில் உள்ள 14 அரிசி ஆலைகளில் 11 ஆலைகளில் தரமற்ற அரிசி நீக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் எச்சரித்தும், கிராமப்புற ரேஷன்கடைகளில் தொடர்ந்து தரமற்ற அரிசியே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலப்பூங்குடி ரேஷன்கடை மூலம் மேலப்பூங்குடி, வலையராதினிப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 600 கார்டுதாரர்களுக்கும், திருமன்பட்டி ரேஷன்கடை மூலம் திருமன்பட்டி, வில்லிப்பட்டி, அழங்கம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 300 கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இங்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் ரேஷன்அரிசி தரமற்று இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in