திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை சுழற்ச்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை சுழற்ச்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களுக்கு சுழற்சி முறையில் பணி : திரி சுதந்திர சபையினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

Published on

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக அர்ச்சகர்களுடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கோயிலில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்திடவும், அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் ஆட்சியர் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று அர்ச்சகர்களுடன் கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.கோகிலா, காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், கோயில் இணை ஆணையர் (பொ) ம.அன்புமணி, தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயிலில் அர்ச்சகர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக திரிசுதந்திர சபையினர் மற்றும் அர்ச்சகர்களிடம் மாவட்ட ஆட்சியர் கருத்துகளை கேட்டறிந்தார்.

கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் பாதையை சீரமைப்பது தொடர்பாக நாளை (செப். 17) நேரில் ஆய்வு செய்யப்படும் எனவும், கோயில் நிர்வாகம் சார்பில்அர்ச்சகர்களுக்கு வழங்கப்படவேண்டிய அர்ச்சனை பங்குத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். திருச்செந்தூர் வட்டாட்சியர் (பொ) ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர் அ.பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல், கோயில் உதவி ஆணையர் வே.செல்வராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in