பவானிசாகர் அணையிலிருந்து 5,114 கனஅடி உபரிநீர் திறப்பு : கீழ்பவானி விவசாயிகள் நீரின்றி வேதனை

பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால், கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பவானி ஆற்றில் விநாடிக்கு 5,114 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் விதிமுறைகளின்படி, இம்மாதம் இறுதி வரை 102 அடிவரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும். கடந்த சில நாட்களாக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நேற்று காலை முதல் சராசரியாக விநாடிக்கு 5,000 கனஅடி நீர் பவானி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், கொடிவேரி அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 5,856 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு விநாடிக்கு 486 கனஅடியும், கீழ்பவானி பாசனத்துக்கு 200 கனஅடியும், பவானி ஆற்றில் உபரி நீராக 5,114 கனஅடியும் திறக்கப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. நசியனூரை அடுத்த கண்ணவேலம்பாளையம் பகுதியில், 19-ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது சீரமைப்பு பணி முடிந்து பெயரளவிற்கு பொதுப்பணித்துறையினர், நீர் திறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பவானி ஆற்றில் உபரிநீராக விநாடிக்கு 5,114 கனஅடி வெளியேற்றப்படும் நிலையில், கீழ்பவானி பாசனம் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் பாசனத்துக்கு நீர் திறப்பதில், வெளிப்படையான எந்த தகவலையும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் தெரிவிக்காமல் மறைத்து வருகின்றனர், என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in