குறிஞ்சிப்பாடி அருகே கள்ளையங்குப்பத்தில் - நெற்பயிரில் பூச்சி தாக்குதல் தடுக்க ஆலோசனை :
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி ஆயக்கட்டு பகுதிகளான குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம் ஆகிய கிராமங்களில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் நேற்று கூட்டாக ஆய்வு செய்தனர்.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் உதவி பேராசியர் நடராஜன் பூச்சியியல் உதவி பேராசியர் மருதாச்சலம்,
குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் பூவராகன், வேளாண் அலுவலர் அனுசுயா, துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், உதவி வேளாண் அலுவலர் அசோக் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தனர். இதில் சேற்று உழவு செய்து நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்டு 30 முதல் 50 நாட்கள் வயதுடைய பயிரில் ஆங்காங்கே கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல், தண்டுதுளைப்பான் மற்றும் இலை சுருட்டு புழு தாக்குதல் காணப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடப்பட்டடது. ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை கலக்கி தெளிக்க கூடாது. தேவைப்படும் தருணங்களில் மட்டுமே பூஞ்சானக்கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
