பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை : சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை :  சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், பொது இடங்களில் விழா கொண்டாடவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் பண்டிகைக் காலங்களில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சமய விழாக்களையொட்டி ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது.

பொதுஇடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்த அனுமதி இல்லை. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் அனுமதி இல்லை.

தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகளுக்கு இது பொருந்தாது.

தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை ஆலயங்களில் வைத்துச் செல்லலாம். அவற்றை முறையாக கொண்டு செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விழா கொண்டாட்டங்களின்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in