ஈரோட்டில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு : நோய் தடுப்பு பணிகளில் மாநகராட்சி தீவிரம்

ஈரோட்டில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு  :  நோய் தடுப்பு பணிகளில் மாநகராட்சி தீவிரம்
Updated on
1 min read

ஈரோட்டில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

மழைக்காலம் தொடங்கி உள்ளதால், ஈரோடு மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடு, வீடாகச் செல்லும் களப்பணியாளர்கள், வீடுகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை அகற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாநகர் வெட்டுக்காட்டுவலசு பகுதியில் சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அன்னை சத்யா நகருக்கு, வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட இரு இடங்களையும் ஆய்வு செய்து, அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள 400 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

பொதுமக்கள் கவனத்திற்கு

தண்ணீர் இருக்கும் குடங்களை மூடி வைத்திருக்க வேண்டும். திறந்தவெளியில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in